நாகர்கோவில் மே 14
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணசாமி கோயிலில் நடந்த தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் மையப்பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலில், பிரசித்தி பெற்ற கிருஷ்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஒன்பதாவது திருவிழா கடந்த 11ம் தேதி நடைபெற்றது. காலை 9 மணிக்கு அனந்த கிருஷ்ணர் பாமா ருக்மணியுடன் தேரில் வலம் வந்தார். கோயில் தேர் செய்யப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு நூற்றாண்டு தேரோட்டம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நிலைக்கு வந்ததும் தீபாரதனை நடந்தது. முன்னதாக தேரோட்டத்திற்கு முன் தேர் மாடனுக்கு பூஜைகள் நடந்தன. தேரோட்டம் முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி பரி வேட்டைக்கு எழுந்தருளல் சப்தா வர்ணம் நடந்தது. நேற்று முன் தினம் (12ம் தேதி) 10 ம் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 5 மணிக்கு சுவாமி ஆறட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பழையாறு ஆறாட்டு துறையில் இருந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தது. தொடர்ந்து தீபாராதனையும் திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு ராஜகோபாலசுவாமி பாமா ருக்மணி சமேதமாக தெப்பத்திற்கு எழுந்தருளினார். 3 முறை தெப்பக்குளத்தில் பலம் வந்தார். நேற்று அதிகாலை 3 மணிக்கு தெப்போற்சவம் நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதை ஒட்டி தெப்பம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.



