ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து தென்காசி வழியாக கொல்லம் வரை செல்லும் சிறப்பு ரயில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தெற்கு ரயில்வே துணை பொது மேலாளர் விவேக் சர்மாவை சென்னையில் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள செகந்திராபாத்தில் இருந்து ரேணிகுண்டா, திருவண்ணாமலை, மதுரை, தென்காசி வழியாக கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வேக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த ரயில் சங்கரன்கோவிலில் நிற்காமல் செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி ஆகவும், மாவட்டத்தின் மிக முக்கிய வர்த்தக நகராகவும், கோவில்கள் நிறைந்த புண்ணிய நகராகவும் விளங்கி வருகிறது. மேலும் தென்காசி, விருதுநகர் வழித்தடத்தில் அதிக வருமானம் தரும் ரயில் நிலையங்களில் இரண்டாவது இடம் வகித்து வருகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட சங்கரன்கோவிலில் செகந்திராபாத் – கொல்லம் சிறப்பு ரயிலுக்கு நிறுத்தம் வழங்காமல் இருப்பதால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏமாற்றத்துடன் இருப்பதோடு கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம், கடை அடைப்பு என பல்வேறு வகையில் எதிர்ப்புகளை தெரிவிக்க தயாராகி வருகின்றனர்.எனவே சங்கரன்கோவில் பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக செகந்திராபாத் கொல்லம் ரயிலுக்கு சங்கரன்கோவில் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது துணை பொது மேலாளர் குகனேசன், மற்றும் தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.