கன்னியாகுமரி, மார்ச். 8:
அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் கோயிலில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருடம் தோறும் காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் படி இந்த ஆண்டு காவடி பாதயாத்திரை விழா மார்ச் 5, 6, ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் விழாவான புதன்கிழமை காலை 5 மணிக்கு நாதஸ்வர இசை, 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 9:30 மணிக்கு காவடிக்கு களபம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையிலான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், அதனை தொடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு மேளதாளங்களுடன் காவடி வீதி உலா விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு அஞ்சுகிராமம் மேற்கு, தெற்கு, வடக்கு பஜார்களுக்கு சென்று மீண்டும் ஆலயத்திற்கு திரும்பி வந்தது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காவடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து பூ, பழம், தேங்காய், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இரண்டாம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு அறங்காவல் குழுத்தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்கபாண்டியன்ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன், செயற்குழு உறுப்பினர் கள் வீடியோகுமார், பரஞ்ஜோதி,
அஞ்சை சுரேஷ், ஆட்டோ பரமசிவன், அஞ்சை லிங்கம் ஆகியோர் முன்னிலையில் கோயில் அர்ச்சகர் கணேசபட்டர் காவடிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து விநாயகர் ஆலயத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பால்ராஜ், ரமேஷ், துரைச்சாமி மற்றும் முருக பக்தர்கள் காவடிகளை தூக்கி பாதயாத்திரைக்கு புறப்பட்டனர். காவடிகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.