நாகர்கோவில், டிச. 12 –
நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்தவர் சபரியானந்தன் (87). இவர் குடும்பத்தார் கவனிப்பின்றி பலவீனமான நிலையில் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருவதாக குமரி மாவட்ட நிமிர் – முதியோர் பாதுகாப்பு திட்ட குழுவினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.
உடனடியாக காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ராமன்புதூர் பகுதிக்கு சென்ற நிமிர் குழுவினர் ஜெயந்தி, சுமதி மற்றும் சேகர் ஆகியோர் முதியவரை சாலை ஓரத்தில் துயரமான நிலையில் நிற்பதை கண்டு விசாரித்தபோது அவர் குடும்ப ஆதரவு இல்லாமல் தனியாக வாழ்ந்து வருவது மற்றும் உடல் நலக் குறைவால் சிரமப்படுவதும் தெரிய வந்தது.
உடனடியாக முதியவரின் பாதுகாப்பு நிலையை மதிப்பிட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரியில் செயல்பட்டு வரும் “ஸ்மைல் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் அவரை பாதுகாப்புடன் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட திமிர் குழுவினருக்கும் ஸ்மைல் இலவச முதியோர் பராமரிப்பு பாதுகாப்பு மையத்திற்கும் மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆதரவற்ற முதியவர்களின் நலனுக்காக காவல்துறை தொடர்ந்து செய்யும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.



