நாகர்கோவில், அக். 15 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தோவாளை அருகே இயங்கி வருகிறது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி விழா லஞ்சம் பெறுவது வழக்கமாக உள்ளது. தற்போது நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீபாவளி விழா கால லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர் பொன்சன் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஆய்வாளர்கள் ரமா மற்றும் சிவசங்கரி உட்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் அலுவலக சூப்பிரண்ட் ராஜலட்சுமி என்பவரிடம் 35 ஆயிரத்து 650 ரூபாய் கணக்கில் வராத லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகியோரிடம் இருந்து சுமார் 21,000 ரூபாய் கணக்கில் வராத லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் புத்தம் புதிதாக உள்ள 20க்கும் மேற்பட்ட பட்டு புடவைகள் மற்றும் பட்டு சால்வைகள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சமாக பணம் மட்டுமல்லாமல் பட்டுப் புடவை மற்றும் பட்டு சால்வைகள் லஞ்சமாக பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் மற்றும் ஆய்வாளர்கள் சுரேஷ்குமார் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி தப்பி ஓடி உள்ளனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் முடிவில் முழு விவரங்களும் தெரிய வரும்.



