களியக்காவிளை, டிச. 8 –
அதங்கோடு பகுதியில் திருவனந்தபுரம் நாகர்கோவில் நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் உள்ள அய்யா வைகுண்டர் பதி கோயில் மற்றும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்லும் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலை நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அந்த பகுதியில் அணுகு சாலை அமைக்க கேட்டு இந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை அனுமதியுடன் மக்கள் அந்த பகுதியில் அணுகு சாலை அமைத்தனர். பக்கச்சுவர் கட்டப்பட்டது. கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு செய்து அந்த அணுகு சாலை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த அணுகு சாலையோடு சேர்ந்த நிலம் வைத்திருக்கும் தனிநபர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதியோடு அமைக்கப்பட்ட அணுகு சாலை மற்றும் பக்கசுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று முன்தினம் இரவோடு இரவாக இடித்து சேதப்படுத்தி உள்ளார்.
நேற்று காலை இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் நடைபெற்ற நான்கு வழி சாலை பணிகளை தடுத்து நிறுத்தி அணுகு சாலையை இடித்து சேதப்படுத்திய தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் உட்பட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



