நாகர்கோவில், ஜன. 7 –
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 79 ஆயிரத்து 667 குடும்ப அட்டைகளுக்கும், 406 இலங்கை தமிழர் மறுவாழ்வு நியாய விலை கடைகள் மூலமாக ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகை நாளை முதல் வழங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த இந்த குடும்ப அட்டைகளுக்கு விடுதல் இன்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவரவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிட்ட தேதியன்று கடைகளுக்கு சென்று பரிசுத்தொகுப்பு, ரொக்க தொகையை பெற்றுக் கொள்ளலாம். நியாய விலை கடைகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்தனி வரிசை முறையை பின்பற்றி எந்த இடையூறும் இல்லாமல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பரிசு பொருட்கள் நான்கு நாட்கள் முதல் அதிகபட்சமாக 6 நாட்களில் அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும். இது தொடர்பாக புகார் ஏதாவது இருப்பின் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் விதமாக கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும் வட்ட அளவில் பறக்கும் படை அமைக்கப்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என கலெக்டர் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.



