கன்னியாகுமரி, நவ. 17 –
கன்னியாகுமரி காவல் நிலைய வளாகத்தில் உள்ள சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் நினைவு காவலர் நல விடுதியில் கட்டப்பட்ட நுழைவு வாயில் மற்றும் போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நுழைவுவாயில் மற்றும் ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்.
இதை யடுத்து எஸ்.பி. நிருபர்களிடம் கூறுகையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் நினைவு நல தங்கும் விடுதியின் இது வரை 800-க்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் வந்து நாள் ஒன்றுக்கு ரூ.175 என்ற குறைந்த வாடகையில் தங்கிவிட்டு சென்றுள்ளனர். மேலும் இந்த தங்கும் விடுதியை ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் வந்து தங்கி பயன்படுத்தலாம். தற்போது போலீசார் சார்பில் திறக்கப்பட்டுள்ள ஆவின் பாலகம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு மாவட்டத்தில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் நிதி பங்களிப்பிற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் கன்னியாகுமரியில் ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு பகவதி அம்மன் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகு கோவிலுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதில் டிஎஸ்பிக்கள் ஜெயச்சந்திரன், நல்லசி வம், ஏடிஎஸ்பி நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராகுல், சரவணன், செல்வகுமார்.ராமர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள் சேகர், சப்.இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் உள்பட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.



