நாகர்கோவில், நவம்பர் 29 –
நாகர்கோவிலில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்ததாக ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் டவுன் ரயில்வே நகர் பகுதியை சேர்ந்தவர் மரிய அற்புத ராஜன் (68). குமரி மாவட்ட காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மரிய அற்புத ராஜன் கடந்த 28ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் வடசேரி போலீசார் சென்று விசாரணை நடத்தி மரிய அற்புத ராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மரிய அற்புத ராஜன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வலது காலில் புண் ஏற்பட்டு வலது கால் 2வது விரலை நீக்கி உள்ளனர். 22-11-25 முதல் 25-11-25 வரை சுகர் பாதிப்பு அதிகமாக இருந்ததால், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு டாக்டர், வலது கணுக்கால் வரை அகற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார். இந்த வேதனையில் மரிய அற்புத ராஜன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி அளித்த புகார் மனு அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


