நாகர்கோவில், டிச. 6 –
கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அம்பேத்கார் நினைவு நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை மனோ தங்கராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் நல்ஆட்சியில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள். கல்வியிலும், சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய மாவட்டம் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டம் என்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.
இன்றைய நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ரூ.23.33 இலட்சம் மதிப்பில் 42 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், 20 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும், ஒரு பயனாளிக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டாவும், பழங்குடியின நலத்துறை சார்பில் ரூ.5.73 கோடி மதிப்பில் 112 பயனாளிகளுக்கு பழங்குடியினர் குடும்ப நல அட்டைகளும், பழங்குடியினர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு வீடுகளும், ஒரு பயனாளிக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரண தொகையும், தாட்கோ சார்பில் ரூ.1.39 கோடி மதிப்பில் 18 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் கடனுதவிகளும், பிரதம மந்திரியின் பொது சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அட்டை 20 பயனாளிகளுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ரூ.1.20 இலட்சம் மதிப்பில் 6 பயனாளிகளுக்கு நலிந்தோர் குடும்ப நல்ல திட்டத்தின் கீழ் உதவித்தொகையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.11 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் 8 பயனாளிகளுக்கு கடனுதவிகளும், வட்டார வணிக வள மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு கடனுதவிகளும், 51 மகளிர்களுக்கும் சுய உதவி குழு அடையாள அட்டைகளும், கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.23.36 இலட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் ஒரு பயனாளிக்கும், கிசான் கிரெடிட் கார்டு 40 பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.35 கோடி மதிப்பில் 13 பயனாளிகளுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.0.20 இலட்சம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரமும், ஒரு பயனாளிக்கு கைபேசியும் என மொத்தம் 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், மாவட்ட வன அலுவலர் அன்பு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



