நாகர்கோவில், நவ. 24 –
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மயிலார், சிற்றார் போன்ற இடங்களில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு 1000க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் மழை தொடர்ந்து ஒரு வார காலமாக நீடித்து வருவதால் மலையோர பகுதிகளிலும் மழை இருப்பதாலும் ரப்பர் மரங்களில் பால் வடிக்கும் சிரட்டையில் மழை நீர் நிரம்பியுள்ளது. இதனால் ரப்பர் மரங்களில் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியும் தடைப்பட்டுள்ளது.
இதனால் தொழிலாளர்கள் மழையின் காரணமாக ரப்பர் பால்வாடிக்கும் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் மழைக்காலங்களில் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என கீரிப்பாறையை சேர்ந்த தொழிலாளி சேகர் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.



