நாகர்கோவில், டிச. 12 –
80 வயது பாட்டியை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிவிட்டு அம்போல் என விட்ட மருமகள். தள்ளாத வயதில் கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் உடன் இருந்து கவனிக்க ஆளின்றி சிகிச்சை எடுக்க முடியாத பரிதாப நிலையில் கலெக்டரிடம் முறையிட ஆம்புலன்ஸில் வந்த பாட்டியால் பரபரப்பு.
குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் மல்காகான் ஆவார் இவருக்கு தற்போது 80 வயதாகிறது. இவருக்கு 4 ஆண் பிள்ளைகள், 2 பெண் பிள்ளைகள் என 6 பேர் உண்டு. இவர்களில் 3 ஆண் மக்கள் இறந்து விட்டனர். இவருடைய இரண்டாவது மகன் இறந்த நிலையில் அவரது மனைவி நான் எனது மாமியை பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்ததால் மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
இந்நிலையில் மாமியாரிடம் அன்பாக பேசிய மருமகள் உங்கள் பெயரில் உள்ள வீட்டை எனக்கு எழுதித்தாருங்கள் கடைசி காலம் வரை உங்களை நான் பார்த்துக் கொள்வேன் என கூறி வீட்டை எழுதி வாங்கியுள்ளார். வீடு தன் வசம் வந்தவுடன் மாமியாரை துன்புறுத்தி வெளியே விரட்டி விட்டுள்ளார். பாட்டியின் கடைசி மகள் தனது வறுமையிலும் பாட்டியை முடிந்த அளவு பார்த்து வந்துள்ளார். மேலும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக பாட்டியின் பேரன் பாட்டியை தன் வீட்டில் தங்க வைத்து அனைத்து உதவிகளும் செய்து கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது மருமகளை பார்க்க சென்ற பாட்டி அங்கு வைத்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமலும், மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் இருந்துள்ளார். இந்நிலையில் மருமகள் மாமியாரை கொடுமைப்படுத்தி மாமியார் இருந்த அறையின் மின் விளக்கு மற்றும் மின்விசிறி போன்றவற்றை கழட்டி எடுத்து விட்டு மாமியாரை இருட்டு அறையில் போட்டு அடைத்து வைத்துள்ளார்.
மருமகளை பார்த்து விட்டு வருகிறேன் என கூறி சென்ற பாட்டி திரும்பி வராததால் பாட்டியை தேடிச்சென்ற பேரன் வீட்டார் அங்கு இருட்டு அறையில் கிடந்த பாட்டியின் நிலையை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாட்டியை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி அவருடைய வீட்டை எழுதி வாங்கிவிட்டு பாட்டியை மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லாமல் இருட்டு அறையில் பூட்டி வைத்திருந்த மருமகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாட்டியை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகளிடமிருந்து வீட்டை மீட்டு பாட்டியை கவனிப்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பேரன் மற்றும் பாட்டி ஆம்புலன்ஸில் வந்து மனு அளித்தனர்.
பாட்டியை நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என கூறி ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிவிட்டு கொடுமைப்படுத்திய மருமகள் மீது கலெக்டர் அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸில் வந்து மனு கொடுத்த பாட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



