நாகர்கோவில், ஜன. 14 –
குமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகம், கக்கோட்டுதலை ஊராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, கலந்து கொண்டு பார்வையிட்டு கூறியதாவது: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு முதல் அரசின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவாக நடத்திட ஆணையிட்டுள்ளார்.
அதனடிப்படையில் இன்று குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் மற்றும் 95 கிராம ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது.
அதன் ஒருபகுதியாக இன்று கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகம், கக்கோட்டுதலை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ விழாவில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடப்பட்டதோடு, பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் கோலப்போட்டி, கபடி, கயிறு இழுத்தல், முறுக்கு கடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது என கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



