மார்த்தாண்டம், டிச. 8 –
குலசேகரம் அருகே உள்ள மணலி விளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் அஜய்தீன் (22). பிஎஸ்சி பட்டதாரி. நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் இவர் தனது நண்பர்கள் ஜெஸ்லின் (18), விஜின் (20) ஆகியோருடன் பைக்கில் சித்திரம்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை அஜய்தீன் ஓட்டியுள்ளார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.
முக்கம்பாலை என்ற பகுதியில் செல்லும் போது சித்திரம்கோட்டில் இருந்து சுருளகோடு நோக்கி கனிம வளம் ஏற்றி வந்த டாரஸ் லாரி ஒன்று வந்து பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பைக்கில் இருந்து விழுந்து மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். இரவு நேரம் என்பதால் முதலில் இதை யாரும் கவனிக்கவில்லை. நீண்ட நேரத்துக்கு பின் அந்த வழியாக பைக்கில் சென்ற சிலர் ரோட்டில் 3 பேர் அடிபட்டு கிடப்பதை பார்த்து குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அஜய்தீன் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. மற்ற இரண்டு பேரும் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



