களியக்காவிளை, நவ. 18 –
சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. அய்யா வைகுண்டரை கையில் விலங்கிட்டு சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்று, கொடுமைப்படுத்திய சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு பாதயாத்திரை சாமிதோப்பு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை களியக்காவிளையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட சிறுபான்மை கூட்டமைப்பின் விளவங்கோடு வட்டார தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகி ஜாண்ரோஸ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியை நெய்யாற்றின்கரை தொகுதி எம்எல்ஏ ஆன்சலம் துவக்கி வைத்துப் பேசினார்.
பாறசாலை தொகுதி எம்எல்ஏ சி.கே. ஹரீந்திரன், களியக்காவிளை பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ. சுரேஷ், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட துணைத் தலைவர் ஷாஜகான், மலையாள எழுத்தாளர் பிரேம்தாஸ் சுவாமிதாஸ் யகூதி ஆகியோர் பேசினர். தொடர்ந்து சாமித்தோப்பு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் பேசினார். மாநில மத நல்லிணக்க இயக்க துணைச் செயலர் ஏ. ஹலீல் ரகுமான், களியக்காவிளை ஒய்எம்சிஏ அமைப்பின் நிர்வாகி கிங்ஸ்லி, தன்னார்வலர் அன்வர் உள்பட பலர் பங்கேற்றனர்.



