நாகர்கோவில், ஜூலை 1 –
நாகர்கோவில் அருகே ஐ.எஸ்.ஆர்.ஓ. இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணகுடி அருகே நேற்று காலை சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண் ஜெயபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இறந்து கிடந்தவர் பையில் இருந்த ஆவணங்கள் மூலம் நடந்த விசாரணையில் இறந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் (71) என்பது தெரியவந்தது. இவர் நாகர்கோவில் அருகே மகேந்திர கிரியில் உள்ள ஐஎஸ்ஆர்ஓ இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவர் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. காரணங்கள் எதுவும் தெரியவில்லை. இதை அடுத்து சந்திரமோகன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது குடும்பத்தினருக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரமோகன் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் எதுவும் உண்டா என்பது தொடர்பான கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.