நாகர்கோவில், டிசம்பர் 31 –
தென்காசி மாவட்டம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக நாயினார் மகள் ராமலட்சுமி (28). இவருக்கு திருமணம் ஆகி தற்போது 6 வயதில் ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரை பிரிந்து ராமலட்சுமி தனியாக வாசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2024 ஆம் வருடம் குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ராமலட்சுமி வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் இரணியல், ஆலங்கோடு பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று தான் தங்கி இருந்த வாடகை வீட்டில் ஜன்னல் கம்பியில் ராமலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சடைந்த பகுதியினர் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராமலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்பது தெரியவில்லை.
ராமலட்சுமியின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது ராமலட்சுமி தந்தை ஆறுமுக நாயினார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக கூறியுள்ளார்.
அதன் பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ராம லட்சுமியின் செல்போனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர் வேலை பார்த்து வந்த சூப்பர் மார்க்கெட்டில் விசாரணை நடந்து வருகிறது. ராம லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் மேல் நடவடிக்கை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.


