நித்திரவிளை , ஜூன் – 1
நித்திரவிளை, கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து மரக்கிளைகள் மின்கம்பிகள் மேல் விழுந்துள்ளதால் மின்தடை ஏற்பட்டது.
இதில் எஸ்டி மாங்காடு, தேரிவிளைப் பகுதியில் அயனி மரம் சாய்ந்து உயர் அழுத்த மின்கம்பி மேல் விழுந்ததில், மின்கம்பம் வளைந்து செபஸ்டியன் என்பவரின் வீட்டின் மேல் சாய்ந்து நின்றது. பக்கத்தில் நின்ற மின்கம்பம் முறிந்து அதிலிருந்த உயர் அழுத்த மின்மாற்றி சுவிட்ச் போர்டு தனியாக கழன்று விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக யாரும் பொதுமக்கள் செல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
பல பகுதிகளில் செல்போன் டவர்களில் நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு செல்போன் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.