கிருஷ்ணகிரி மே 26: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் மாங்கனி விளைகிறது மாவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரியில் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 31-வது மாங்கனி கண்காட்சியை நடத்தி முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது, இந்நிலையில் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மற்றும் மாவட்ட SP, ஆகியோரை சந்தித்துவிட்டு, செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவசரகதியில் திமுக மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகனுக்கு சொந்தமான தேவராஜ் திடலில், மாவட்ட நிர்வாகம் மாங்கனி கண்காட்சியை நடத்தி முடிக்க அடிக்கல் நாட்டியுள்ளனர். இது முற்றிலும் லாபநோக்கத்துடன் செய்யப்பட்ட ஏற்பாடுதான். கடந்த வருடம் இதே போல் பிரச்னை ஏற்பட்டு, அதை பாஜக சார்பில் கண்டித்ததும், கடந்த கால மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் கிருஷ்ணகிரி ஆடவர் கல்லூரியில் நன்றாக நடத்தினார்கள் என்றும், ஆனால் இந்த வருடம் திடீரென சுங்கச்சாவடி அருகே நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே மட்டுமல்லாமல் சுங்கச்சாவடி அருகிலேயே இது போன்ற கண்காட்சியை அமைத்தால், பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும், மாங்கனி விழாகுழுவை சேர்ந்த ஒரு சிலரின் லாப நோக்கத்துடன் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஏற்படும் வாகன நெரிசலால், போக்குவரத்திற்கு இடையூறு,விபத்து, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே திமுக MLAவின் இடத்தை ரத்து செய்து, உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இந்த 31-வது மாங்கனி கண்காட்சியை அரசுக்கு சொந்தமான இடத்தில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், தவறினால் கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக சார்பில் சட்ட போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தும் என எச்சரித்து பேசினார். மாங்கனி விழா குழுவினர் லாப நோக்குடன் செயல்படுவதை தவிர்த்து, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக அகில இந்திய மாங்கனி கண்காட்சியை நடத்துவது தான் கிருஷ்ணகிரி மாவட்ட பாஜகவின் நோக்கம் என்றும் கூறினார். இந்த நிகழ்வின்போது பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, மேற்கு மாவட்ட தலைவர் V.நாராயணா, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் K.கோவிந்தராஜ், நகர தலைவர் விமலா, கோபால், கார்த்தி, உள்ளிட்ட பாஜகவினர் உடன் இருந்தனர்.



