தேனி, ஏப். 20 –
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தில் நித்யா மேனன் ஜோடியாக நடித்த வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. அந்த கிராமத்தில் ஒரு தெரு போன்ற செட்டில், கடை, வீடுகள், பஸ் ஸ்டாப், கிராம கோவில் அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் அனுப்பபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த செட் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.
மேலும் அந்த செட்டில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனுப்பபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மரம் மற்றும் பிளைவுட்டால் ஆன அந்த செட்டில் பற்றிய தீ மளமளவென பரவியது. இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் காற்று பலமாக வீசிய காரணத்தால் செட் முழுவதும் எரிந்து நாசமானது. சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்திற்கு அமைக்கப்பட்டிருந்த செட் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.