கன்னியாகுமரி பிப் 6
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் சி.எஸ்.ஐ. காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதன் மற்றொரு பகுதியில் மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இது தற்போது உபயோகப்படுத்தாமல் உள்ளது.இதனால் இதனருகில் புதர் மண்டி கிடந்த செடி, கொடிகள் காய்ந்த நிலையில் இருந்தது. இதில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பிடித்து அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் அங்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.