மதுரை மார்ச் 15,
மதுரை பாண்டி கோயில் சாலையில் குப்பைகள் கொட்டினால் ஒரு லட்சம் வரை அபராதம்
மதுரை பாண்டி கோயில் சுற்றுச் சாலைப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டினால் ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் எச்சரித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்ப்பில் மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியான மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, உத்தங்குடி, பாண்டி கோயில் சுற்றுச்சாலை ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள காலியிடங்கள், சாலையோரங்கள், நீர்நிலைகள், திறந்தவெளி கால்வாய்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் குப்பைகளைக் கொட்டுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, மதுரை மாநகராட்சி சார்பில் குப்பைகள் சேகரிப்புப்பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அல்லது மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளில் கொட்ட வேண்டும்.தவிர்த்து, மதுரை பாண்டி கோயில் சுற்றுச் சாலைப் பகுதிகளில் உள்ள சாலையோரங்கள், நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.