திருப்பூர், பிப். 8:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் நிதி உதவி – 1.38 கிலோ தங்கத்தினை
அமைச்சர்கள் வழங்கினர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் 1.38 கிலோ திருமாங்கல்யத்திற்கு தங்கத்தினை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.எல்.ஏ. மற்றும் மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி உள்ளார்கள். மகளிருக்கு நகரப்பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்தை கொண்டு வந்து வேலைக்கு செல்லும் பெண்கள் தன் பொருளாதாரத்தை மிச்சப்படுத்தி குடும்பத்தை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. மேலும் முதல்வர் சுய உதவி குழு தொடங்கி வைத்தார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டமிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஈ.வே.ரா மணியம்மையார் விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதியுதவி திட்டம். அன்னை தெரசா ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண உதவித்திட்டம் போன்ற 4 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும், 10 மற்றும் 12-வது படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-2022-ம் நிதியாண்டிற்கு 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயம் படித்த 2,200 பயனாளிகளுக்கு ரூ.9.15 கோடி மதிப்பீட்டில் நிதியுதவியும், 17.60 கிலோ தங்கமும், 2022-2023-ம் நிதியாண்டிற்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 325 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் நிதியுதவியும். 2.60 கிலோ தங்கமும். 2023-2024- நிதியாண்டிற்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 545 பயனாளிகளுக்கு ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் நிதியுதவியும். 4.36 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது, 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு படித்த 48 பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் ரூ.12 லட்சமும் மற்றும் பட்டம் மற்றும் பட்டயம் படித்த 125 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.62.50 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவித்தொகை என மொத்தம் 173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவித் தொகை மற்றும் 1 கிலோ 384 கிராம் தங்கம் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் மொத்தம் ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சார்பில் 173 பயனாளிகளுக்கு ரூ.74.50 லட்சம் மதிப்பீட்டில் திருமண நிதியுதவி மற்றும் 1.38 கிலோ திருமாங்கல்யத்திற்கு தங்கத்தினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ராபாலசுப்பரமணியம், திருப்பூர் மாநகராட்சி மண்டத்தலைவர்கள் பத்மநாபன் (4-ம் மண்டலம்) கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்). மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி மற்றும் இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.