ஈரோடு, நவ. 18 –
2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசு பணியாளர்கள் சுமார் 4000 கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஈரோடு தாலுகா அலுவலக முன்பு ஆர்ப்பாட்டமும் நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் விஜய் மனோகரன் சரவணன் மதியழகன் வீரா கார்த்திக் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எடுக்கப்பட்டன.
இது பற்றி அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் கூறியதாவது: தமிழக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாமல் குழு அமைக்கப்பட்டு கால தாமதப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே போராட்ட களத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எங்களின் இந்த கோரிக்கைகளின் நியாயத்தை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கிறது. இதன்பிறகும் தமிழக அரசு மவுனம் காத்தால் மாநில ஒருங்கிணைப்பாளர் கூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



