நாகர்கோவில் ஜன 26
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பகவதி அம்மன் ஆலயம், வான்புகழ் கொண்ட வள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம், விவேகானந்தர் பாறை, காந்தி, காமராஜர் மணிமண்டபங்கள் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில விஷயங்கள் உள்ளது.
முக்கியமாக இங்குள்ள காட்சி கோபுரம் பகுதியில் இருந்து கடலின் அழகை ரசிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகவும் விருப்பமாக உள்ளனர். இதனருகில் கட்டண கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடத்திலிருந்து வரும் துர்நாற்றதால் கடற்கரை அழகினை ரசிக்க வருபவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து பார்வையிடும் வகையில், அனைத்து தரப்பினராலும் விரும்பக்கூடிய பகுதியில் இருக்கும் இந்த கழிப்பிடம் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் ஏற்கனவே இதை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் இதுவரை அதை அகற்றவில்லை.
இதே கன்னியாகுமரியில் சிறுநீர் கழிப்பிடத்திற்காக வேறு பகுதிகளும் உள்ளது. அவை முறையாக பராமரிப்பு செய்வதால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறும் இல்லை. ஆனால் காட்சி கோபுரம் அருகே இருக்கும் இந்த பகுதியின் அழகியலை கெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடலின் அருகாமையில் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுகள் கடலில் கலப்பதனால் கடல் நீரும் மாசுபடுகிறது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் இந்த கழிப்பிடத்தை இடித்து அகற்ற வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.