தருமபுரி அடுத்த மணியம்பாடி ஊராட்சி ஒடசல்பட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2023- 24 ஆம் ஆண்டு குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலக கட்டிடம் மற்றும் மணியம்பாடி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் குறித்தும், அதனை தொடர்ந்து தென்கரைக்கோட்டை ஊராட்சி பாப்பாரப்பட்டி கிராமத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கனிமம் ஒதுக்கீடு நிதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் கம்பைநல்லூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்த ரூ.1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட குடிநீர் திட்ட பணிகளை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு செய்து அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு பொதுமக்களின் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது, காலதாமதத்தை தவிர்த்து உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பேரூராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும் கம்பைநல்லூர் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வெளிப்புற நோயாளிகள் பதிவேடுகளை ஆய்வு செய்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், கலைவாணி, பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.



