தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். தருமபுரி மாவட்ட விசைத்தறி கூலி பாவு உற்பத்தியாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது தருமபுரி மாவட்டத்தில் 15,000 குடும்பங்கள் தலைமுறை, தலைமுறையாக நெசவுத் தொழில் செய்து வருகிறது. நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு காரணமாக வியாபாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார சூழ்நிலை களாலூம்,நவீன உயர் ரக விசைத்தறி எந்திரங்களாலும் இப்பகுதி மக்கள் இந்த தொழிலை நடத்த முடியாமல் பல்வேறு கூலி வேலைக்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் வீடுகளில் உள்ள விசைத்தறி கூடங்களுக்கு ஒரு அடிக்கு ரூபாய் 12 விதம், வணிகரீதியாக நில வரியை அமல்படுத்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்தத் தொழிலை பாதிக்கும் இந்த வரி விதிப்பை நிறுத்தவும், ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.



