கன்னியாகுமரி,அக்.10-
கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா , நவராத்திரி என இரு திருவிழாக்கள் நடைபெறுகிறது.இதில்,நவராத்திரி விழா பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் .
இந்த திருவிழா காலங்களில் விவேகானந்தபுரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில் சர்க்கரை தீர்த்த கிணற்றிலிருந்து புனித நீர் யானையில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது மற்றும் ஊர்வலத்திற்கு யானை பயன்படுத்துவது ஐதீகம்.கடந்த வைகாசி திருவிழாவிற்கு யானை வரவழைக்கபடவில்லை.அது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த திருவிழாவிற்கு யானையை வரவழைக்க வேண்டும் என பக்தர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மனு கொடுக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதி
முதல் நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் யானை வரவழைக்கபடவில்லை.
இதனால் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் நவராத்திரி திருவிழாவின் போது பாரம்பரிய முறைப்படி யானை மீது புனித நீர் எடுத்து வரப்படவில்லை. இதற்கு கண்டனமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் 48 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.