கன்னியாகுமரி பிப் 10
சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி ஆட்டோ டிரைவர் ஒருவரை அவரது நண்பர் ஏமாற்றிய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆரல்வாய்மொழி அருகே உள்ள குருக்கள் மடத்தை சேர்ந்த ஒருவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு தக்கலையை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் ஒருவர் அண்மையில் அறிமுகம் ஆகியிருக்கிறார். இருவரும் நன்கு பேசி நாளடைவில் நண்பர்களாக மாறியிருக்கிறார்கள். அப்போது, தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் குடும்பத்தின் வறுமை நிலை பற்றியும் ஆட்டோ டிரைவர் லாரி டிரைவரிடம் கூறியிருக்கிறார்.அப்போது அவரது நண்பரான லாரி டிரைவர், ‘எனக்கு சுங்கத் துறையில் தெரிந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பறிமுதல் செய்துள்ள கடத்தல் தங்கத்தை ஏலம் விட உள்ளனர். அந்த தங்கத்தை அதிகாரிகள் உதவியுடன் சந்தை விலையை விட பாதிக்கு பாதி வாங்கி தருகிறேன். உனக்கு தெரிந்த நண்பர்களிடம் இருந்து பணம் வாங்கி தந்தால், தங்கம் வாங்கி தருவதோடு உனக்கும் கமிஷன் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.இதனை உண்மை என நம்பிய ஆட்டோ டிரைவர், தனது நண்பர்களிடம் இதைப்பற்றி சொல்லி அவர்களிடம் இருந்து 1.80 லட்சம் பணத்தை புரட்டியிருக்கிறார். பின்னர் லாரி டிரைவர் நண்பர் சொல்லியது போல, அவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் வைத்து பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய லாரி டிரைவர், தங்கம் கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் உள்ளது.அதை வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் இருந்து பைக்கையும் வாங்கி சென்றுள்ளார். தங்கத்துடன் தனது லாரி டிரைவர் நண்பர் வருவார் என கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஆட்டோ டிரைவருக்கு நேரம் செல்ல செல்ல ஏமாற்றமே மிஞ்சியது. நீண்ட நேரம் ஆகியும் வராததால், ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் வந்தது. உடனே அவரை செல்போனில் கூப்பிட்டுள்ளார்.
அப்போது, பைக்கை நிறுத்திய இடத்தை சொன்ன லாரி டிரைவர் அதனை எடுத்துக்கொள்ளும்படியும் கொஞ்ச நேரத்தில் தங்க நகையுடன் வருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அப்போதும் அவர் சொல்லியபடி திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. அப்போதுதான் தன்னை லாரி டிரைவர் ஏமாற்றியதை உணர்ந்த ஆட்டோ டிரைவர், கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார்.
இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.