நாகர்கோவில் – ஜூன் – 20
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப் பூ என இருபோக சாகுபடி நடந்து வருகிறது. இதில் நடப்பு பருவ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த ஒன்றாம் தேதி 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பேச்சிப்பாறை அணைத் தண்ணீர் திறக்கப்படும் தேதியைக் கவனத்தில் கொண்டுதான் விவசாயிகள் தங்கள் வயல்களில் நாற்றங்கால் பாவியிருந்தார்கள். இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக தோவாளை சானலில் தூவச்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. விவசாயிகள் நடப்பு போக சாகுபடி இருப்பதைச் சுட்டிக்காட்டி விரைந்து இதை சீரமைக்க வலியுறுத்தினர். இருந்தும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனத்தால் இந்த பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பணிகள் மிகத்தாமதமாகவே துவங்கியிருந்த நிலையில் குமரியில் மீண்டும் மழை பெய்தது. இதனால் அசம்பு மலை பகுதியில் இருந்து காட்டாற்று வெள்ளம் உலக்கை அருவி வழியாக பாய்ந்து, தூவச்சி பகுதியில் மிகத் தாமதமாகத் துவங்கிய கால்வாய் சீரமைப்பு நடந்துவந்த தளத்தையும் மூழ்கடித்தது. மீண்டும் துவங்கியப் பணிகள் மிக ஆமை வேகத்தில் நடப்பதால் இந்த நிமிடம் வரை பேச்சிப்பாறையில் இருந்து தோவாளை சானலுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
ஜூன் ஒன்றாம் தேதி அணை திறக்கப்படும் என நம்பி வயல் தயாரிப்பு செய்து, நாற்றங்கால் பாவிய விவசாயிகள் இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். 6500 ஏக்கரில் சாகுபடி செய்யும் நோக்கத்தோடு விவசாயிகள் தங்கள் வயல்களில் தயார் செய்து வைத்திருக்கும் நாற்றங்கால்களும் முற்றியும், கருகியும் பயனற்றுப் போய்விட்டது.
தோவாளை சானலில் கடந்த மார்ச் மாதமே உடைப்பு ஏற்பட்டும், அதிகாரிகள் சீரமைப்பதில் மிகவும் மெத்தனமாக இருந்துள்ளனர். உரிய நேரத்தில் உடைப்பு சரிசெய்யப்பட்டு இருந்தால் ஜூன் 1 ஆம் தேதி, தோவாளை சானலிலும் தண்ணீர் திறந்திருக்கலாம். இந்த சுற்றுவட்டார விவசாயிகள் அம்பை 16, டி.பி.எஸ் 5 என்னும் இரு ரக நெல்களை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். 110 நாள்கள் பயிரான இவை ஜூன் 1 ஆம் தேதியை கணக்கு வைத்து நடவு செய்யப்பட்டு இருந்தால் தான் சந்தை வாய்ப்பும் கிடைத்திருக்கும். இப்போது வயல் தயாரிப்பு, நாற்றங்கால் ஆகியப் பணிகளுக்காக இதுவரை ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.
சானல் உரிய நேரத்தில் சீர் செய்யப்படாது என விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னரே அறிவுறுத்தப்பட்டு இருந்தால் விவசாயிகளுக்கு இழப்பு இல்லாமலாவது இருந்திருக்கும். தோவாளை சானலில் 6500 ஏக்கர் விவசாய நிலங்களில் இந்த போக சாகுபடியே நடக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
தோவாளை சானலில் சீரமைப்புப் பணியை துரித கதியில் முடித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் வரும் 25 ஆம் தேதி, செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.