நாகர்கோவில் – நவ – 02 ,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பூச்சிவிளாகம் பகுதியில் அமைந்துள்ள சம்பக்குளம் அவ் வட்டார மக்கள் பெரும் பகுதியினர் குளிப்பதற்கும், நிலத்தடி நீரை பாதுகாத்திடவும் பயன்பட்டு வரும் குளமாகும். மேலும் அதிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய் இராஜாக்கமங்கலம் ஒன்றியத்தின் தர்மபுரம், மேல கிருஷ்ணன் புதூர், ஆத்திக்காட்டு விளை, பள்ளம், புத்தளம், மணக்குடி ஆகிய பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் ஆதாரத்தை பாதுகாத்து வந்தது. தற்போது இக்குளத்தில் ஆகாய தாமரைகள் நிறைந்துள்ளதால் தண்ணீர் முழுமையாக மாசுபட்டு துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. சம்பக்குளத் திற்கு தண்ணீர் வரும் வட்டக் கரை அனந்தனாறு கால்வாயின் 6 வது மதகு இதுவரையிலும் திறக்கப்படாமல் உள்ளது.அங்கிருந்து குளத்திற்கு வரும் கால்வாய் பராமரிக்கப்படாமல் புதர்கள் நிறைந்துள்ளன. தற்போது மேல் உள்ள குளங்களில் இருந்து வரும் கழிவு நீர் மட்டுமே சம்பக் குளத்திற்கு வந்து சேர்கிறது. இராஜாங்க மங்கலம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 6 பஞ்சாயத்து பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்தை பூர்த்தி செய்ய வேண்டிய சம்பக்குளம் பராமரிப்பு இல்லாமல் புறக்கணிக்கப் பட்டு வருகிறது . பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இக் குளத்தை பராமரித்து சீரமைத்திடவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாத்திடவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி பேசப்பட்டுள்ளது. எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பக்குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி கடைமடை வரை தண்ணீர் விட வலியுறுத்தி வரும் 05.11.24 செவ்வாய் காலை 10 மணிக்கு மேல் கிருஷ்ணன் புதூர் சாலை சந்திப்பில் சிபிஐ எம் கட்சியின் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.