மார்த்தாண்டம், பிப்- 3
குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி பகுதியில் தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை போன்ற வரி வசூல் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக வாகன பிரச்சாரம் மற்றும் பல்வேறு கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஊழியர்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தொகையை நேரில் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குழித்துறை நகராட்சி வருவாய் உதவியாளர் லட்சுமணன் என்பவர் நகராட்சிக்கு உட்பட்ட 3-ம் வார்டில் படப்பறை பகுதியில் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாலையன் என்பவர் வீட்டுக்கு வரி வசூல் செய்ய சென்றபோது இவரை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார்.
இதையடுத்து லட்சுமணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.