கடலோர நிலப்பரப்பு கடலுக்குள்… கடலரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்
குறும்பனை பெர்லின் வேண்டுகோள்.
இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதி கடலரிப்பால் கடலுக்குள் சென்றுவிடும் ஆபத்து உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதை முன்னெச்சரிக்கையாகத் தடுத்திட கடலரிப்பை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் இதை முதன்மையான கோரிக்கையாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது..
இந்தியாவின் சுமார் 8000 கி.மீ. நீளமுள்ள கடற்கரையின் தற்போதைய முதன்மையான பிரச்சனை கடலரிப்பு என்ற பேரிடர்தான். புவி வெப்பமயமாவதால் பனிப்பாறைகள் உருகி கடலில் வந்து சேர்வதாலும் கனிம மணலை அள்ளி தாதுக்களைப் பிரித்தெடுக்க கடற்கரையின் பாதுகாப்பு அரணாக உள்ள மணல்மேடு மணல் குன்றுகளை மணல்ஆலைகள் தோண்டி எடுப்பதாலும் கடலரிப்பைக் கட்டுப்படுத்த கடற்கரைகளில் போடப்படுகின்ற தவறான கட்டுமானங்களின் எதிர் வினையாலும் கடலரிப்பு என்ற பேரிடர் மிகப்பெரும் அளவு இந்திய கடற்கரைகளை அழித்துக்கொண்டிருக்கிறது. குமரிமாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 200 மீட்டர் கடற்கரை நிலங்களும் ஏழு வரிசை குடியிருப்புகளும் தடுப்புச் சுவர், தூண்டில் வளைவு துறைமுகம் என்ற கட்டுமானங்களும் கடலுக்குள் சென்றுவிட்டன. கடலரிப்புக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தடுக்கும் முயற்களைச் செய்யாமல் மீனவ மக்களை வேறு இடங்களுக்கு வெளியேற்றும் வேலைகளைத்தான் மத்திய- மாநில அரசுகள் செய்துகொண்டிருக்கின்றன.
கடலரிப்பைத் தேசிய பேரிடராக அறிவித்து கடலரிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தடுக்கவும் கடலரிப்பின்மூலம் ஏற்படும் பாதிப்புகளை தடுத்திடவும் பாதிக்கப்படும் மக்களுக்கு மீட்பு நிவாரணம் மறுகட்டமைப்பு போன்ற வாழ்வாதார வசதிகளை செய்திடவேண்டுமானால் கடலரிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று 2010-ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் திருமிகு. ராஜேந்திர ரத்னூ அவர்கள் விரிவான கருத்துரு தயாரித்து கடலரிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க டெல்லி சென்று பல முயற்சிகளைச் செய்தார்கள். அவருக்குப்பின் அந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக கடலரிப்பு, கடல் கொந்தளிப்பு, இடி- மின்னல் போன்றவற்றை மாநில பேரிடராக அறிவித்து மாநில பேரிடர் நிதியிலிருந்து பத்து சதவிகிதத்தை முன்னெச்சரிக்கை- மீட்பு- மறுகட்டமைப்புப் பணிகளை செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். மாநில பேரிடருக்கென்று நிதி வழங்காததாலும் நிதியைக் குறைத்ததாலும் கடலரிப்பைத் தடுப்பதற்கான தொலைநோக்குத் திட்டத்தை மாநில அரசால் செயல்படுத்த முடியவில்லை.
எனவே, கடலரிப்பை தேசிய பேரிடராக அறிவித்து அந்த நிதிமூலம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் இனிவரும் காலங்களில் கடற்கரை பிரதேசங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். அதை மத்திய அரசு உடனே செய்யவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம் என்று குறும்பனை பெர்லின் கூறினார்.