நாமக்கல் ஜூன் 24
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக முதல்வா் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை அவா் நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும்’ என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. இதற்கு காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வா் பொறுப்பேற்க வேண்டும். அவா் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சிலா் உயிரிழந்தனா்.
அவ்வாறு இருந்தும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்படுவது தொடா் கதையாகி வருகின்றன. கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவோா் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவா்களுக்கு வழங்கப்பட்ட மெத்தனால் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதைக்கண்டறிய வேண்டும். அதில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கியது தவறு எனக் கூற முடியாது. ஏனென்றால் அந்தத் தவறுக்கு காரணமே தமிழக அரசுதான். தமிழகம் முழுவதும் அரசு மதுக்கடைகள் அதிக அளவில் உள்ளன.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் ஆயிரம் மதுக்கடைகளைக் குறைப்போம் என்றாா்கள். ஆனால் இதுவரை மதுக் கடைகள் குறைக்கப்படவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் அருகில் அவை விற்பனை செய்யப்படுகின்றன; அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி வரை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த நிதி வழங்கியுள்ளாா். ஆண்டுதோறும் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் யோகா வகுப்புகள் நடைபெற வேண்டும். விளையாட்டுகளில் காணப்பட்ட ஆா்வம் முன்பிருந்ததுபோல தற்போது மாணவா்களுக்கு இல்லை. யோகா என்பது நமது முன்னோா் நமக்குக் கொடுத்த கொடை. அனைவரும் யோகாவை கற்றுக் கொள்ள வேண்டும்.
மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில், நாமக்கல்லில் நின்று செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமூக ஊடகங்கள் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும். தவறான செய்திகளை யாரும் பரப்பக் கூடாது. செய்தி நிறுவனங்களும் உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு தகவல் பரப்பியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, புதுப்பாளையத்தில் உள்ள தனது குலதெய்வக் கோயிலிலும், நாமக்கல் ஆஞ்சனேய சுவாமி கோயிலிலும் அமைச்சா் சுவாமி தரிசனம் செய்தாா். அவா் இரண்டாவது முறையாக மத்திய இணை அமைச்சா் பொறுப்பேற்றுள்ளதால், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் சாா்பில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.