மதுரை செப்டம்பர் 30,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் – நவராத்திரி உற்சவம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் மஹிசாசூரன் என்பவன் தனக்கு பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளால் அழிவு இல்லை எனும் படியாக சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி ஒன்பது நாட்கள் தவமிருந்து விரதம் இருந்து அவ்வரக்கனை வதம் செய்தார். “மஹிஷம் என்பதற்கு அறியாமை அல்லது இருள் எனும் பொருள்படும்”. இவ்வுலகில் அறியாமை எனும் இருள்நீங்கி அறிவு என்னும் ஒளி ஒளிர்விட்டு ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரியின் தாற்பரியம் அதன்படி மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்
1434-ஆம் பசலி நவராத்திரி உற்சவம் 03.10.2024 முதல் 12.10.2024-ஆம் தேதி முடிய நடைபெறவுள்ளது. மேலும், 17.10.2024 அன்று சாந்தாபிஷேகம் நடைபெறும். மேற்படி உற்சவ நாட்களில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாத்துதல், தங்ககவசம் சாத்துதல், உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரதம் உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது. மேலும், மேற்படி உற்சவ நாட்களான 03.10.2024 முதல் 12.10.2024 வரை தினசரி மாலை 06.00 மணி முதல் அருள்மிகு மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேட பூஜைகள் இரவு 08.30 மணி வரை நடைபெறும். எனவே, மேற்படி பூஜை கால நேரங்களில் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்பட மாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குத் தான் தேங்காய் உடைப்பு மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும் என்ற விபரம் இத்திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றார்கள்”. மேலும் 03.10.2024 முதல் 12.10.2024 வரை திருக்கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 09.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரையிலும், மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம்,
வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் திருவிழா அழைப்பிதழில் கண்டுள்ளபடி நடைபெற உள்ளன. மேலும் கொலுச்சாவடியில் கொலு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்குபவர்கள், சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்கள் சம்பந்தமான மற்றும் இதர பொம்மைகளை வழங்குபவர்கள் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ச.கிருஷ்ணன், பி.எஸ்.சி., பி.எல்., இணைஆணையர்/செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.



