தென்தாமரைகுளம், நவ. 6 –
கேரள மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அய்யா வைகுண்டர் எனவும், பாகுபாடுகள் அதிகரிக்கும் நிலையில் அவரைப்பற்றிய உண்மைகளை இளம் தலைமுறையினருக்கு பயிற்றுவிக்க வேண்டும் எனவும் கேரளத்தின் கலாச்சார அமைப்புகள் பங்கேற்ற கருத்தரங்கத்தில் தலைவர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி அருகில் உள்ள அய்யா வைகுண்டர் பிறந்த சாமிதோப்புக்கு கேரளத்தின் பல்வேறு கலாச்சார அமைப்புகள் மறுமலர்ச்சி கல்விப் பயணமாக (நவோத்தான படன யாத்திரா) நவம்பர் 5 புதனன்று வருகை தந்தனர். திருவனந்தபுரம் முதல் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வரையிலான இந்த பயணத்திற்கு கேரள நவோத்தான முற்போக்கு சங்க தலைவர் என். ரதீந்திரன் தலைமை வகித்தார்.
இதில் அன்புவனம் நிறுவனர் பாலபிஜாபதி அடிகளார், கேரள மலையாள சமாஜ தலைவர் ஹரிதாஸ், கேரள ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் பிரசாந்த், கேரள பாடநூல் திட்ட உறுப்பினர் டாக்டர் ஜி. சந்தோஷ்குமார், கிரந்தசாலா செயலாளர் ராஜன், கலைஞரும் எழுத்தாளருமான பீனா, கே.கே. சுந்தரேசன், பிஜு, சிவராமன், அய்யா வைகுண்டர் பாரம்பரியம் பாதுகாப்பு இயக்க செயலாளர் என்.எஸ். கண்ணன் ஆகியோர் பேசினர். அய்யா வைகுண்டர் பாரம்பரியம் பாதுகாப்பு இயக்க தலைவர் என். முருகேசன், சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அகமது உசேன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி குமரி எழிலன், அன்புவனம் நிர்வாகி ஆர். தர்மரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர் எமிலின் நன்றி கூறினார்.
என். ரதீந்திரன் பேசுகையில், அண்மைக்காலம் வரை கேரள மறுமலர்ச்சி நாயகர்களாக ஸ்ரீ நாராயண குரு. மகாத்மா ஐயன்காளி, சட்டம்பி சுவாமிகள் மட்டுமே முன்னிறுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு முன்பாகவே சமத்துவ சமாஜம் அமைத்து வழிகாட்டிவர அய்யா வைகுண்டர். ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் அதிகரித்துவரும் இன்றைய காலகட்டத்தில் அவரது வரலாறு நமது இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கான ஒரு கல்விப் பயணமாக 25 பேர் கொண்ட குழுவாக நாங்கள் வந்திருக்கிறோம் என்றார்.
பிரசாந்த் பேசுகையில், கேரளத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் சுற்றுலாவாக கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு சாமிதோப்பை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்றார். டாக்டர் ஜி. சந்தோஷ்குமார் பேசுகையில், நான் பொறுப்பு வகித்த 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டர் வரலாறு இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.



