மார்த்தாண்டம் அருகே உள்ள புலிப்பனம் பகுதியில் நேற்று மாலையில் பைக்கில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பைக் மீது கார் ஒன்று மோதியது. இதில் அந்த பைக்கில் இருந்தவர் தூக்கி சாலையில் வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
இது குறித்து விசாரித்த போது, இறந்தவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த முருகன் மகன் தில்லை ராஜா (28) என்பது தெரியவந்தது. இவர் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள பால்பண்ணையில் பணிபுரிந்து வருவதாகவும், நேற்று அவர் பணி முடிந்து வீட்டிற்கு பைக்கில் செல்லும் போது இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரியவந்தது.
இதை எடுத்து அவரது தந்தை முருகன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் காரை ஓட்டி வந்த குழித்துறை பகுதியைச் சேர்ந்த ஆதித்த ஜான் ஜேக்கப் சிங் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



