சென்னை கிண்டியில் உள்ள ராயல் லீ மெரிடியன் ஓட்டலில் ஓபிசி அணி சார்பில் தமிழ்நாட்டில் ஓ.பி.சி. பிரிவில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு ஓ.பி.சி. அணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பாஜக ஓ.பி.சி அணியின்
தேசிய தலைவர் லட்சுமணன் எம்பி., மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய நயினார் நகேந்திரன் கூறும்போது,
ஓ.பி.சி. ஆணையம் 1953 ஆண்டு ஏற்பட்டது. ஆனால் காங்கிரஸ் அரசால் பின்னர் நிராகரிக்கப்பட்டது. தற்போது பிரதமர் நரேந்திரமோடியால் தான் ஒ.பி.சி ஆணையத்திற்கு அங்கீகாரம் வழங்கபட்டு ஆணையம் புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது யார் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் யார் இலங்கைக்கு தாரை வார்த்தனர் என்பதை சொல்ல மறந்து தற்போது மீட்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.
தற்போது கட்சதீவை மீட்க வேண்டும் என தீர்மானத்தில் கூட மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தது.
ஓபிசி பிரிவினர் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக செயல்படவேண்டும். வரக்கூடிய அரசு எந்த அரசாக இருந்தாலும் ஒபிசி மக்களுக்கு யார் உதவி செய்கின்றார்களோ, ஒபிசி மக்களை யாரெல்லாம் ஆதரிக்கின்றார்களோ, அவர்களுக்கு வரக்கூடிய தேர்தலில் நம் ஆதரவை தெரிவிக்கவேண்டும் என பேசினார்.
அதனை தொடர்ந்து சிறந்த ஆளுமைகான ஒ.பி.சி. விருதுகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ், சினிமா தயாரிப்பாளர் கலைபுலி தானு, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட 32 பேருக்கு சிறப்பு விருந்தினர்கள் பாஜக ஒ.பி.சி அணியின் தேசிய தலைவர் லட்சுமணன் எம்பி., மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் விருதுகள் வழங்கி கவுரவித்தனர்.