நாகர்கோவில் டிச 30
அய்யா வைகுண்டசாமி அவதார தினமான மாசி 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு சாமிதோப்பு பதி நிர்வாகியும் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனருமான வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அய்யா வைகுண்டர் 1008 மாசி 20 ல் கடவுளாக உதயமானார். அய்யா வைகுண்டர் கலியழித்து தர்மயுக வாழ்வு தரவந்த காரண கடவுள். அய்யா வைகுண்டர் வருகைக்கு முன்னர் ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட 18 சாதி மக்கள் (பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்) வழிபட அனுமதிக்கவில்லை தெருவில் நடமாட விடவில்லை தாய்மார்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணிய அனுமதிக்கவில்லை.இந்த நிலையில் அய்யா வழி என்கின்ற அய்யா வைகுண்டர் வழிபாட்டை சாமிதோப்பு தலைமை பதி முதல் பல்லாயிரக்கணக்கான தாங்கல்களையும், பதிகளையும் உருவாக்கி சமத்துவ சமுதாயம் உருவாக்கி அனைவரையும் வழிபட வைத்து சமூக நீதியை நிலை நாட்டியவர் அய்யா வைகுண்டர். தீண்டாமையை ஒழிக்க தொட்டு நாமமிடும் நடைமுறையை கொண்டு வந்தார். அடிமைத்தனத்தை அப்புறப்படுத்த தலையில் ஆண்கள் தலைப்பாகை அணிந்து வழிபட வைத்தார். நீதி கட்சி, திராவிட அமைப்புகள் உருவாவதற்கு நூறு வருடங்களுக்கு முன்னதாகவே அவர்கள் சமுதாயத்தில் ஏற்படுத்த நினைத்த சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கியவர் அய்யா வைகுண்டர். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் அய்யா வைகுண்டரின் அவதாரதினமான மாசி 20ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் விடுமுறை வழங்குவது அவசியமாகும் . எனவே முதல்வர் அய்யா வைகுண்டரின் அவதாரதினமான மாசி 20ம் நாளை( 4 -3 -2025) விடுமுறை நாளாக அறிவித்திட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்