கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா விழாவையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பாக, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு (27.01.2025) அன்று கொடியசைத்து துவக்கி வைத்து, வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 01.01.2025 5 31.01.2025 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடித்தல், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று (27.01.2025) நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி, பெங்களூர் சாலை வழியாக புதுப்பேட்டை ரவுண்டானாவில் முடிவடைந்தது.
பொதுமக்கள் விபத்தினை தவிர்க்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு, சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைகவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும். சாலைக் குறியீடுகளையும் விதிகளையும் மதித்தால் விபத்துகளை தடுத்திட முடியும். வாகனத்தை பயன்படுத்தும் போது கை பேசியை பயன்படுத்தக்கூடாது. அதேப்போல அபாயகரமாக வாகனத்தை இயக்க கூடாது. குறிப்பாக மது அருந்தி வாகத்தை ஓட்டக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் தவறான திசையில் மற்றும் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். எனவே, பொதுமக்கள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். மேலும், தலைகவசம் அணிந்து வராத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசங்களை வழங்கி, இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டக் கூடாது என அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திருலோகசுந்தர், உதவி கோட்டப்பொறியாளர்களஅன்புஎழில், முருகன், கவிதா, உதவிப்பொறியாளர் அன்பரசன், வட்டாட்சியர் வளர்மதி, காவல் ஆய்வாளர் வெங்கடேச பிரவு
மற்றும் உதவிப்பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், அலுவலக பணியாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.