அரியலூர், அக்;11
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா 05.10.2024 முதல் 12.10.2024 நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றையதினம் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் “30 நாட்களில் முடிவான தகவலை முன்னெடுத்து தரும் சட்டம், தகவல் வரவில்லை என்றால் மேல்முறையீடு செய்யும் சட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் தகவல் தரும் தனித்துவச் சட்டம், சாமானிய மனிதனும் இச்சட்டத்தில் தகவலைக் கேட்டுப் பெறலாம், அரசின் வெளிப்படைத் தன்மையை அனைவருக்கும் காட்டும்சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிவீர்! பயன் பெறுவீர்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கிட்டும் சென்றனர். பேரணியானது அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பல்துறை வளாக அலுவலகம், நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் பேருந்துநிலையம் அண்ணாசிலை அருகில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, ஆசிரியர்கள், காவல் துறையினர், மாணவ, மாணவிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்