திருவாரூர் டிசம்பர் 27,
திருவாரூர் பழைய தொடர்வண்டி நிலையத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ., கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளினை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 18.12.2024 முதல் 27.12.2024 வரை கொண்டாடப்பெற்று வருகிறது.
ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் ஆறாம் நாள் நிகழ்வாக இன்று 26.12.2024 ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்கள்.
இப்பேரணியில், திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, இராபியம்மாள் அகமது மொய்தீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் என 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள் பங்கேற்றனர்.
இப்பேரணியானது, பழைய தொடர்வண்டி நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக புதிய தொடர்வண்டி நிலையத்தில் முடிவடைந்தது.
இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ச.சீதாலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழ்ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று இப்பேரணியினை சிறப்பித்தனர்.