ஊட்டி. டிச.18
கோத்தகிரி ஊட்டி சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கோத்தகிரி பேருந்து நிலைய டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தினர் தெரிவிக்கையில்.
கோத்தகிரியில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை ஆகும். இங்கு போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க சாலை வளைவுகளும் விரிவுபடுத்தப்பட்டு தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு சாலையோரங்களில் உள்ள அபாய நிலையில் உள்ள மரங்களும் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை விபத்துகளும் தவிர்க்கப்பட்டன. இந்நிலையில் சமீபத்தில் ஜனாதிபதி வருகையை தொடர்ந்து கோத்தகிரி ஊட்டி இடையிலான சாலை பணிகளை செப்பனிடும் போது மக்கள் கூடும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன இந்திய ஜனாதிபதி கோத்தகிரியில் இருந்து ஊட்டி மார்க்கமாக சாலையில் செல்லும் பொழுது சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் உடனடியாக அகற்றப்பட்டன. கடந்த வாரத்தில் கோத்தகிரி பகுதியில் சாலையின் குறுக்கே சென்ற வயதான மூதாட்டி ஒருவரை வேகமாக சென்ற அரசு பேருந்து மோதியதால் சம்பவ இடத்திலேயே அந்த மூதாட்டி இறந்து விட்டார். வேகத்தடை இல்லாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி வந்துவிட்டு சென்ற பின்பு ஒரு மாத காலமாகியும் பெயர்த்தெடுக்கப்பட்ட வேகத்தடைகள் இதுவரை மீண்டும் சரி செய்யப்படாமல் இருப்பதால் தொடர்ந்து விபத்து அபாயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு கோத்தகிரி நெடுஞ்சாலை துறையினர் பெயர்த்து எடுக்கப்பட்ட வேகத்தடைகளை உடனடியாக சீரமைத்து தருமாறு கோத்தகிரி டாக்சி ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.