பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி
16 வது வார்டில் சுமார் 500 குடும்பங்கள்
வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள பூவையர் இந்திரகுல தெருவில் அங்கன்வாடி மையம் அருகே ஏற்கனவே கட்டப்பட்ட கழிப்பறை பல வருடங்களாக பயன்படுத்தப் படாமல் இருந்ததால் தற்போது அக்கழிப்பறை கட்டடத்தை இடித்து மீண்டும் அதே இடத்தில் கழிப்பறை கட்டடம் கட்ட நகராட்சியினர் முடிவு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் கழிப்பறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் நகராட்சி முன்பு கிராம நிர்வாகிகள் தலைமையில் 150 பெண்கள் உள்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்பு காட்டுபரமக்குடி மக்கள் நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமியை சந்தித்து காட்டுப்பரமக்குடியில் மீண்டும் கட்டப்படும் கழிப்பறை கட்டும்பணியை உடனடியாக நிறுத்துவதுடன், அங்கு அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் பூங்கா அமைக்க வேண்டுமென கோரிக்கை மனுவை அளித்து வலியுறுத்தினர்.மேலும், கழிப்பறை கட்டத்திற்கு பதிலாக பூங்கா அமைக்கவில்லை என்றால், முறையான அனுமதியுடன் நகராட்சி அலுவலகத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவுடன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்காளர் அட்டை, ரேசன் கார்டு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்போம் என கூறினர்.
இதைத் தொடர்ந்து ஆணையார் முத்துச்சாமி மற்றும் நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி ஆகியோர் காட்டுப்பரமக்குடியில் கழிப்பறை கட்டடம் கட்டும் இடத்தை நேரில் பார்வையிட்டு சர்வே செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தனர். இதையடுத்து காட்டுப்பரமக்குடி மக்கள் தங்களது முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்