கோவை பிப்:06
பொள்ளாச்சி வட்டம் ஆட்சிபட்டி கிராம பஞ்சாயத்தை பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைத்தால் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும், வீட்டு வரி, குடிநீர் வரி, மற்றும் தொழில் வரிகளால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலவித சிரமங்கள் உண்டாகும்.
15 வது நிதி குழு நிதி மற்றும் தேசிய கிராமப்புற வளர்ச்சி நிதி கிடைக்காமல் கிராமத்தின் வளர்ச்சி பின்னடைவை சந்திக்க நேரிடும். ஆட்சிபட்டி பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால் விவசாயத்துறையில் நெருக்கடிகள் ஏற்படும், வீடற்ற ஏழைகளுக்கு மானிய விலையில் வீடு கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும், எனவே தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அனைத்து கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



