சென்னை, ஏப்ரல் 9
சமையல் எரிவாயு விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்வை மிகுந்த வலியில் தள்ளிவிடும் என்றும், இது மக்கள்மீது நேரடியாக தாக்கம் செய்யும் நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ள தமிழக வெற்றி கழகம், விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியுள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ள நிலையில், அதனுடைய பயன் மக்களுக்கு வழங்கப்படாமல், எரிவாயு விலை உயர்த்தப்படுவது முற்றிலும் நியாயமற்றது எனக் குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் நேரங்களில் விலை குறைத்து, பின்னர் மீண்டும் உயர்த்தும் ஆட்சி முறைமைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், கடந்த சட்டமன்ற தேர்தலில் ‘சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம்’ வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த திமுக அரசு, நான்கு ஆண்டுகள் ஆன போதும் அதனை நிறைவேற்றவில்லை என்றும், இது மக்களுக்கு அழுத்தமான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசு, இருவரும் பொய் வாக்குறுதி, மக்களை ஏமாற்றும் போக்கில் ஒத்துழைத்து வருகின்றன எனக் கடுமையாக விமர்சித்துள்ள தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் இவ்விலை உயர்விற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமாகும் என்றும், அந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் தங்கள் தமிழக வெற்றிக் கழகம் மக்கள் பக்கத்தில் நிற்கும் என்றும் உறுதியளித்து சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.