சிவகங்கை: ஆக:28
சிவகங்கை மற்றும் இளையான்குடி ஆகிய பகுதிகளில் அதிமுக பிஜேபி கட்சிகள் மாறி மாறி உருவப் பொம்மைகளை எரிக்க முயன்றனர். கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து எடப்பாடி மீது பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
அதன் அடிப்படையில் அதிமுகவினர் கொந்தளித்த நிலையில் அதற்கு அவர்களும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் சிவகங்கை அரண்மனை வாசலில் அதிமுக மாவட்டக் கழகத்தின் தலைமையின் படி இரவு சுமார் 9 மணி அளவில் அதிமுகவினர் திடீரென ஒன்று கூடி அண்ணாமலையின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் விரைந்து வந்து பொம்மையை பறிக்க முயன்ற போது ஒரு பக்கம் போலீசாரும் பொம்மையின் மறுபக்கம் அதிமுகவினரும் பிடித்து இழுக்க உருவ பொம்மையானது உருக்குலைந்து போன நிலையில் பொம்மையை எரிக்க விடாமல் போலீசார் தடுத்து விட்டனர்.
இதே போல இளையான்குடியில் நகரச் செயலாளர் நாகூர்மீரான் ஒன்றியச் செயலாளர் கோபி ஆகியோர் தலைமையில் அண்ணாமலையின் உருவப் பொம்மையை எறிக்க முயன்ற போது போலீசார் தடுத்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து சிவகங்கை உழவர் சந்தையின் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் நகர் தலைவர் உதயா தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெறும் பாதிப்பு ஏற்ப்பட்டது.