நாகர்கோவில் மார்ச் 8
குமரி. சட்ட விரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் “கவனக்குறைவாக நடந்து விட்டது” என நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பால்ராஜ் மற்றும் ஜான் ரோஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை பெஞ்சில் மனு தாக்கல் செய்து உத்தரவுகள் பெற்றிருந்தனர். மாவட்ட ஆட்சியர் புதிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மதுரை உயர் நீதிமன்ற பெஞ்சில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கில் குமரி மாவட்டத்தில் கனிமவளத்துறை துணை இயக்குனராக இருந்த அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் பெல்லார்மின் ஜோஸ், வல்சலாகுமாரி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குமரி மாவட்ட ஆட்சியர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இருந்தார். அதில் “கவன குறைவாக நடந்துவிட்டது” என்று கூறி மன்னிப்பு கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்றம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்து உள்ளது. அதில் மனுதாரர்களான பால்ராஜ் மற்றும் ஜான் ரோஸ் ஆகியோரை சேர்க்காமல் விசாரணையை முடிக்க கூடாது என்று உத்தரவிட்டும் அந்த ஆணையை மீறிய மாவட்ட ஆட்சியர் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. குறிப்பாக நீதிமன்றம் தனது உத்தரவில், “மாவட்ட ஆட்சியர் எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற ஆணை தெளிவாக இருக்கும் போது அது மாவட்ட ஆட்சியர் கவனிக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை” என்றும் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக புகார்தாரரை அழைத்து விசாரணை நடத்தி முடிவு செய்வது சிறந்தது என்று உயர்நீதிமன்றம் கூறி உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் மனுதாரர்களின் புகார்கள் மீது விசாரணை நடத்தும் போது மனுதாரர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களையும் விசாரித்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளதன் மூலம் கொடுக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மனுதாரர்களை மதித்து அவர்களையும் அழைத்து விசாரணை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பின்பற்ற வேண்டும் என்பதுதான் குமரி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக அதிகாரிகள் ஒரு சிலர் விளம்பரங்கள் தேடுவதையும் பத்திரிகைகளில் தங்கள் பெயர் வரும் அளவுக்கு பெயரளவில் செயல்பாடுகளை காண்பிப்பதை விட்டுவிட்டு சட்டத்தின்படி நேர்மையாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களுக்கு குமரி மாவட்ட அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுப்பதே சிறந்த வழி என்றால் மிகையல்ல.