விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திலிருந்து ஆபத்தான ரசாயனங்களை ஏற்றிச்சென்ற கப்பல் விபத்துக்குள்ளானதில் ஒருதலைமுறை கடலும் கடற்கரையும் விவசாய நிலங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டதால் பாதிப்புகளின் வீரியத்தை ஆய்வுசெய்து மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக கப்பல் கம்பெனியும் அதானியும் மத்திய அரசும் கேரள அரசும் வழங்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது சம்மந்தமாக நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் கூறும்போது…
கடந்த மே மாதம் 25 -ம் தேதி விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திலிருந்து மிகவும் ஆபத்தான ரசாயனங்களையும் கால்சியம் குளோரைடு கனிமங்களையும் ஏற்றிச் சென்ற லைபீரிய கப்பலான எம்எஸ்சி எல்சா 3 கொல்லம் ஆலப்பழா கடலில் 38 கடல்மைல் தொலைவில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இது ஒரு பேராபத்து நிறைந்த விபத்தாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், அதில் இருந்த 24 பணியாளர்கள் மீட்கப்பட்டதாலும் ஐந்து நாட்களுக்கு முன்பு இன்சூரன்ஸ் கட்டியதால் முழு காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும் என்பதாலும் இதை ஒரு குட் ஆக்சிடென்ட் என்று வர்ணிக்கிறார்கள். ஆனால் இதன் பின்னால் ஒரு தலைமுறை மக்கள் கடலைப்பயன்படுத்த முடியாத சூழலும் கடல் உயிரிங்களுக்கு ஏற்படும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படப்போவதும் கடற்கரை நிலப்பகுதி கந்தக பூமியாக மாறிவிடும் சூழலும் கடற்கரை மீனவர்கள் தங்கள் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து பரிதவிக்கப்போகும் கொடுமையும் ஆபத்தான ரசாயனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு விவசாய நிலங்களும் விவசாயிகளும் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற ஒருதுளி சிந்தனைகூட இல்லை.
கடந்த 2020 -ம் ஆண்டு எம்டி நியூ டைமண்ட்ஸ் என்ற கப்பல் கொழும்புக்கு அருகே 27 கி.மீ தூரத்தில் தீப்பிடித்து எரிந்தது. கொழும்பு- நீர்கொழும்பு கடல்பகுதியில் எக்ஸ்பிரஸ் பியள் என்ற கப்பல் தீவிபத்தினால் இலங்கை சந்தித்த மாபெரும் சூழலியல் அழிவினை ஐநா சூழலியல் ஆய்வுக் குழுவின் அறிக்கை மூலம் அறிந்துகொள்ள முடியும்.
அதுபோல் இந்த கப்பல் விபத்தின் தாக்கமும் இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்கு நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். அதன் நேரடி அனுபவங்களை குமரிமாவட்டத்தில் தற்போது நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கேரள மாநிலத்தின் கொச்சி ஆலப்புழா கொல்லம் திருவனந்தபுரம் மாவட்ட கடற்கரைகளில் கரை ஒதுங்கிய ஆபத்தான கழிவுகள் குமரிமாவட்ட கடலோரப்பகுதிகளில் குவியல் குவியலாக கரை ஒதுங்கிக் கொண்டிருக்கிறது. இதை பேரிடர் மீட்புக்குழு எப்படி கையாளப்போகிறது என்றுதெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எண்ணூர் கடலில் விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியான கழிவுகளை அகற்ற அதிநவீன கருவி என்று முன்னாள் அமைச்சர் பொன்னார் சொன்ன கக்கூஸ் வாளியும் ஜக்கும்போல் இப்போதும் வாளிகளைக் கொண்டு சேகரிக்கப் போகிறார்களா? சேகரித்த கழிவுகளை எங்கே கொண்டு கொட்டப்போகிறார்கள். இந்த கடலோர நிலப்பகுதிகளில் அது எந்தவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்தும்? சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வெளிப்படையாக வெளியிடப்படுமா? கடலில் சுற்றுச்சூழலுக்கு ஒரு பாதிப்பு என்றால் அது நேரடியாக விவசாய நிலங்களைப் பாதிக்கும் என்ற நிலையில் விவசாய பாதிப்பு என்ன என்பதை வெள்ளை அறிக்கை முலம் தெளிவுபடுத்தவேண்டும்.
இவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி அரை நூற்றாண்டுகாலம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்த கப்பல் கம்பெனியும் அதானி நிறுவனமும் இதற்கு முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும்.
இதனால் ஒரு தலைமுறையே பாதிப்புக்குள்ளாகும் மீனவ மக்களுக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் தலா ஒரு கோடி இழப்பீடு எம்எஸ்சி எல்சா கப்பல் கம்பெனியும் அதானி துறைமுகமும் மத்திய அரசும் கேரள அரசும் வழங்க வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைக்கிறது என்று குறும்பனை பெர்லின் தெரிவித்தார்.


