தஞ்சாவூர். நவ.15
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் திருவையாறு வட்டம் இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த மகா அபிலேஷ்பேகம் ( வயது 62) சில ஆண்டுகளாக வயிறு பெரிதாக இருப்பதாகவும், அதனால் உடல் நலக்குறை ஏற்பட்டுள்ளதாக உதவித்தொகை அளிக்குமாறு கோரி மனு அளித்தார். இதை பார்த்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உடனடியாக மாவட்ட சமூக நல அலுவலர் அவர்களிடமும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதனிடமும் தொடர்பு கொண்டு அப்பெண்ணுக்கு பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அப்பெண் தஞ்சாவூர் மருத்துவம் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளி யாக அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது இதில் அவருக்கு வயிற்றில் கட்டி, ரத்த சோகை இருப்பதும் தெரிய வந்தது .பலகட்ட மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மகா அபிலேஷ் பேகத்துக்கு ரத்தம் ஏற்றப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது வயிற்றில் இருந்து 30 கிலோ கட்டி அகற்றப்பட்டது.
இந்த கடினமான அறுவை சிகிச்சையை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி வெற்றிகரமாக செய்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாரிமுத்து, பாரதிராஜா, முனிய சாமி, மயக்கவியல் மருத்துவர் உதயணன் தலைமையிலான குழுவினரையும், சமூக நல பணியாளர்களையும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் நேரில் சந்தித்து பாராட்டினர்.